NERVIZHI NEWS - DO NOT COPY
Nervizhi News Network
காத்திருக்கவும்...
நேரலை (LIVE)
Translate / மொழிமாற்றம் / පරිවර්තනය
முக்கிய செய்திகள்
+++ இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய நேரடித் தொகுப்புச் செய்திகள் உடனுக்குடன்.. +++
நெர்விழி நியூஸ் - எங்களின் சமூக ஊடகப் பக்கங்கள்

இன்றைய பகல் நேர செய்திகள் | 11 ஜூன் 2026

 

📍 யாழ்ப்பாணம் கலாசார மையம் மாநகரசபையின் பொறுப்பில் கொண்டுவரப்பட வேண்டும் – யாழ் மாநகரசபையில் ஏகமனதாக தீர்மானம்

யாழ்ப்பாணம் கலாசார மையத்தை யாழ்ப்பாண மாநகரசபையின் நிர்வாகப் பொறுப்புக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாநகரசபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மாநகரின் மாதாந்த அமர்வு முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் நடைபெற்றபோது, கலாசார மையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு தொடர்பில் நடைபெற்ற விவாதத்தின் பின்னர் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2014 ஜூன் 9ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தை விரைவாக யாழ்ப்பாண மாநகரசபைக்கு கையளிக்க வேண்டும் எனவும், இதற்காக எந்தவொரு நம்பிக்கைப் பொறுப்பு கட்டமைப்பையும் (Trust) உருவாக்குவதற்கு சபை இணங்கவில்லை எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

⚖️ சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

கடவுச்சீட்டு மோசடி வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதன் மூலம் அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

⚖️ பசில் ராஜபக்ஸ தொடர்பான வழக்கில் சர்வதேச கைது உத்தரவு நடைமுறை குறித்து நீதிமன்றம் விளக்கம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தொடர்பான வழக்கில், தேவையானால் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பெறுவதற்கான சட்ட நடைமுறைகளை முன்னெடுக்க முடியும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களம் உரிய சத்தியக் கடதாசியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது வரை எந்தவொரு சர்வதேச கைது உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

🎓 31 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டுக்குள் நியமனம்

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், 31,000க்கும் அதிகமான புதிய ஆசிரியர்களை இந்த ஆண்டுக்குள் சேவையில் இணைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

போட்டிப் பரீட்சைகளின் அடிப்படையில் 23,006 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளதுடன், மேலுமாக 6,500 டிப்ளோமாதாரர்களும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

⚖️ நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு தொடர்பில் அமைச்சரவை அனுமதி இல்லை

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக இதுவரை அமைச்சரவை மட்டத்தில் எந்த உத்தியோகபூர்வ அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

🚨 குருணாகலில் குடும்பத் தகராறு: மனைவி கொலை – கணவரும் உயிரிழப்பு

குருணாகல் மாவட்டத்தின் படிவெல பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 61 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 59 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

🚨 வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள் வெடித்து பேருந்து சாரதி உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையாற்றிய 55 வயதுடைய சொகுசு பேருந்து சாரதி ஒருவர், வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் பொதிகளில் ஒன்று வெடித்ததால் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் இரண்டு போதைப்பொருள் பொதிகள் வயிற்றில் இருந்தமை கண்டறியப்பட்டதுடன், அவற்றில் ஒன்று வெடித்ததன் காரணமாக நச்சுப் பொருள் இரத்தத்தில் கலந்ததே மரணத்திற்குக் காரணம் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🌍 உலக அமைதிச் சுட்டெண்ணில் இலங்கைக்கு வரலாற்றுச் சாதனை

2026ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டெண்ணில் இலங்கை 30 இடங்கள் முன்னேறி உலகளவில் 67ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டு ஸ்திரத்தன்மை மற்றும் குற்றச்செயல்களின் குறைவு ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கான முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

📰 தொடர்ந்து நம்பகமான மற்றும் விரைவான செய்திகளுக்கு

Nervizhi News Network

பார்வையாளர்கள்: ...
PK.JUTHAN
News 🗞️ reporter PK .JUTHAN
Sri Lanka, Batticaloa, Kokkadichcholai