கல்முனை, ஜூலை 05 – 16 வயதுடைய சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில், சிறுமியின் தரப்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, கல்முனை நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞருக்கும், பின்னர் அந்த நிலையத்திற்கு சென்றிருந்த சிறுமிக்கும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினத்தன்று இரவு, சிறுமியை வீட்டிலிருந்து வெளியே வருமாறு அழைத்த பின்னர், வாடகை வேனில் அழைத்துச் சென்று அம்பாறை மாவட்டத்தின் மற்றொரு பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் சிறுமி பாதுகாப்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தை அடைந்து சம்பவம் குறித்து தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுத்து முக்கிய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொரு 56 வயதுடைய நபர் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதுடன், அவர் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
– Nervizhi News Network
“ஐக்கியமும் துல்லியமும் கொண்ட உண்மையான செய்திகள் உடனுக்குடன்”
