நாட்டின் அரச வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை வசதி மற்றும் சேவை குறைபாடுகளைத் தீர்க்கும் நோக்கில், அடுத்த நான்கு ஆண்டுகளை உள்ளடக்கிய விசேட அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்திற்காக ரூ.31,000 மில்லியன் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாயா ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற ஆய்வுப் பயணத்தின் போது, வைத்தியசாலை கட்டமைப்பு, மருத்துவ சேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் விரிவாக ஆராய்ந்தார்.
வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், வார்டுகள், ஆய்வகம், இரத்த வங்கி, ஹீமோடையாலிசிஸ் பிரிவு மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட பல பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் வைத்தியசாலை நிர்வாகம், நிபுணர் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், சேவை வழங்கலில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
வெல்லவாயா ஆதார வைத்தியசாலை ‘பி’ தர அடிப்படை வைத்தியசாலையாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த தரத்திற்கு அவசியமான பல வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதனால், முதற்கட்டமாக ‘பி’ தர வைத்தியசாலைக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உபகரணங்களை முழுமையாக நிறுவுவது முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு விசேட பணிக்குழுவொன்றை அமைத்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். பல பிரிவுகள் தனித்தனியாக செயற்பட்டதால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சிறுநீரகக் கற்கள் தொடர்பான அறுவைச் சிகிச்சைக்காக சுமார் 2,000 நோயாளர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக கலந்துரையாடலின் போது தெரியவந்தது.
இதற்கான தீர்வாக, மிரிகம வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சை வசதிகளுடன் கூடிய கட்டிடத்தில் தேவையான பணியாளர்களை நியமிக்க அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அங்கு அறுவைச் சிகிச்சை நடவடிக்கைகள் இம்மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வெல்லவாயா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பல சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் வெல்லவாயா வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை அமைச்சர் பாராட்டியதுடன், சுகாதாரத் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
